புதுடெல்லி: இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கிடையே சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று (4ம் தேதி) தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதியை ஏந்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 1,200 பேர் கொண்ட குழுவில், கல்வான் மோதலில் காயமடைந்த குய் ஃபபாவோ என்ற சீன ராணுவ வீரர் இடம் பெற்றிருந்தார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் பிரச்சினை தொடர்பான அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். ஒலிம்பிக் போன்ற ஒரு நிகழ்வை அரசியலாக்குவதற்கு சீனத் தரப்பு தேர்வு செய்திருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது. பெய்ஜிங்கில் உள்ளஇந்திய தூதரகத்தின் பொறுப்பாளர்கள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க, நிறைவுவிழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள்" என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாவை நேரடியாக ஒளிபரப்ப மாட்டேம் என்று தூர்தர்ஷன் கூறியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பனிச்சறுக்கு வீரர் ஆரிப் மொகமது கான் மட்டுமே கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.