இந்தியா

காஷ்மீரில் 370 பிரிவு நீக்கிய பிறகு 1,697 பண்டிட்களுக்கு அரசு பணி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காஷ்மீருக்கான 370-வது சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பல்வேறு அரசுத் துறைகளில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த 1,697 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

காஷ்மீர் அரசு அளித்துள்ள புள்ளிவிவரப்படி, 1,54,712 நபர்களை உள்ளடக்கிய 44,684 புலம் பெயர்ந்த பண்டிட் குடும்பங்கள் ஜம்முவில் உள்ள நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் காஷ்மீர் அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இதுவரை 1,697 பேருக்கு பணி நியமனம் வழங்கியுள்ளது. மேலும் 1,140 பேரை தேர்ந்தெடுத்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.

1990-களில் தீவிரவாதம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறிய இந்துக்கள் பலருக்கு சொத்துகள் திரும்ப வழங்கப் பட்டுள்ளது. இந்து குடும்பங்களின் மூதாதையர் சொத்துகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

- பிடிஐ

SCROLL FOR NEXT