ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி இன்று பதவியேற்றுக் கொள்கிறார். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றவர்களே இந்த முறையும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். கூட்டணிக் கட்சியான பாஜக மட்டும் ஒரு அமைச்சரை மாற்ற முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி பொறுப்பேற்றது. இதில் பிடிபியின் முப்தி முகமது சையது முதல்வராகவும், பாஜகவின் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் முப்தி முகமது சையது உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்தார்.
தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன், முப்தியின் மகள் மெகபூபா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் பிடிபி - பாஜக கூட்டணி அரசு அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி இன்று காலை 11.00 மணி அளவில் பதவியேற்றுக் கொள்கிறார். மேலும் அசாமின் சைதா அன்வாரா தைமூருக்கு அடுத்தபடியாக முதல்வராக பதவியேற்கும் நாட்டின் இரண்டாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையும் மெகபூபா வுக்கு கிடைக்கவுள்ளது. பதவி யேற்புக்கான ஏற்பாடுகள் ஜம்மு வில் உள்ள ஆளுநர் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமைச்சரவையில் யார், யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து துணை முதல்வராக பதவியேற்கவுள்ள பாஜகவின் நிர்மல் சிங் மற்றும் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த மெகபூபா நேற்று ஜம்மு வந்து சேர்ந்தார். அப்போது ஏற்கெனவே இருந்த அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடருவது என அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் பாஜக தரப்பில் ஒரேயொரு அமைச்சரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக வேறொருவரை அமைச்சராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மெகபூபா அமைச்சரவையில் 16 கேபினட் அமைச்சர்களும், 8 இணை அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். அதில் பாஜகவை சேர்ந்த இரு அமைச்சர்களும் அடங்குவர்.
இதற்கிடையில் மெகபூபாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயடு மற்றும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரா சிங், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.