புதுடெல்லி: "அஞ்சல் துறை கட்டமைப்புகளின் சொத்து மதிப்பு தொடர்பாக தரவுகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை" என மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவ்சிங் ஜெசிங்பாய் சவுகான் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி.யா டி.எம்.கதிர் ஆனந்த், "அஞ்சல் துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களின் எண்ணிக்கை விவரங்கள் மற்றும் அஞ்சல் துறை சொத்து மதிப்பு என்ன? நாடு முழுவதிலும் உள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் ஊழியர்களைப் பல்வேறு துறை சார்ந்த அரசு திட்டங்களின் பல்நோக்கு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு ஒன்றிய அரசுக்கு ஏதேனும் உத்தேசமுள்ளதா?” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்தியத் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் தேவ்சிங் ஜெசிங்பாய் சவுகான் எழுத்துபூர்வமாக அளித்த பதிலின் விவரம்: ”அஞ்சல்/பார்சல், சேமிப்பு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளுக்கு கூடுதலாக பல்வேறு மக்களை மையப்படுத்திய சேவைகளை வழங்குவதற்கு தற்போதுள்ள தபால் நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தபால் நிலையங்கள் பிற துறைகள் தொடர்பான மக்களை மையமாகக் கொண்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. குறிப்பாக ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் வசதிகள், தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க செயலாக்கம், தபால் நிலையங்களை அணுகலாம்.
இதற்காக, அவைகளில் அமைக்கப்பட்டுள்ள "பொது சேவை மையங்கள்", டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள், ரயில்வே பயணிகள் முன்பதிவு அமைப்பு, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் போன்றவற்றின் மூலம் வீட்டுக்கு வீடு வங்கிச் சேவைகள் என பல்வேறு துறை சார்ந்த சேவைகளை தபால் துறையினர் செய்து வருகின்றனர்.
தபால் துறையின் தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் நிலம் பல்வேறு மக்களை மையப்படுத்திய சேவைகள் மற்றும் பார்சல் ஹப்கள், டிரான்ஸ்ஷிப்மென்ட் சென்டர்கள் உள்ளிட்ட அஞ்சல் கட்டிடங்களின் கட்டுமானங்களுக்கு நிதியின் இருப்புக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் நாடெங்கும் உள்ள அஞ்சல் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து தொன்னூறு ஆகும். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 16,875 பேர் பணியாற்றி வருகின்றார். அஞ்சல் துறைக்கு சொந்தமான கட்டமைப்புகளின் சொத்து மதிப்பு தொடர்பாக தரவுகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை” என்று மத்திய இணை அமைச்சர் பதில் அளித்தார்.