பெங்களூரு: மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், கர்நாடக பள்ளி பாடநூலில் 'தபால்காரர்' என குறிப்பிடப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் தமிழில் ரெண்டகம் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இவர் கடந்த 2010-ம்ஆண்டு மலையாளத்தில் 'ஓரிடத்தொரு போஸ்ட்மேன்' என்ற படத்தில் தபால்காரராக நடித்திருந்தார். இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளி பாடநூலில் 'போலீஸ்காரர்' என்பதற்கு விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரியின் படத்தையும், 'தபால்காரர்' என குறிப்பிட்டு 'ஓரிடத்தொரு போஸ்ட்மேன்' படத்தின் போஸ்டரில் இருக்கும் நடிகர் குஞ்சாக்கோ போபனின் படத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இதையடுத்து குஞ்சாக்கோ போபன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடைசியில் கர்நாடகாவில் எனக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது” என நகைச்சுவையாக அந்த புகைப்படத்தை பகிர்ந்தார். இதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வேறு சில நடிகர்களும், இயக்குநர்களும் குஞ்சாக்கோ போபனை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர்.