லக்னோ: உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கு வரும் 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் உ.பி. தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இங்கு ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே கடந்த 2017-ம்ஆண்டில் லக்னோவுக்கு வந்த உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 25 வயதான பூஜா ஷுக்லா என்ற இளம்பெண் 10 பேருடன் இணைந்து கருப்புக் கொடி காட்டினார். இது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் பூஜா ஷுக்லா போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்.
அவர் லக்னோ வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து பூஜா ஷுக்லா கூறும்போது, “முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடிகாட்டியபோது எங்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜனநாயக முறைப்படி நாங்கள் போராட்டம் நடத்தினோம். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவைச் சந்தித்துப் பேசினோம். அப்போது எனக்கு மாணவர் பிரிவில் பொறுப்பு கொடுத்து கட்சிப் பணியாற்ற வைத்தனர்.தற்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளனர். நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்றார்.