புதுடெல்லி: சம்பளதாரர்கள், நடுத்தர, ஏழைகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய பட்ஜெட் குறித்து ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்:
ராகுல் காந்தி: சம்பளம் பெறுவோர், நடுத்தர மக்கள், ஏழைகள்உள்ளிட்ட சாதாரண மக்களுக்குபட்ஜெட்டில் ஒன்றுமில்லை. சமூகத்தில் நலிந்த பிரிவினர்,இளைஞர்கள், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மோடி அரசின்இந்த பட்ஜெட் வெறும் பூஜ்ஜியம்.
மம்தா பானர்ஜி: பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் நசுக்கப்படுகின்றனர். அவர்களுக்கான எந்த அறிவிப்புகளும் இல்லாத பூஜ்ஜிய பட்ஜெட்டாக இது உள்ளது. வெறும் வார்த்தை ஜாலங்களைத் தவிர சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை.
காங்.எம்.பி. சசி தரூர்: பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை. நாம் கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருகிறோம். சாதாரண மக்களுக்கு வரிகளில் நிவாரணம் எதுவும் அளிக்கப்படவில்லை. ‘அச்சே தின்’ எனப்படும் நல்ல நாள் வரும் என்று மத்திய அரசுகூறுகிறது. அந்த நல்ல நாள் வருவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது. பட்ஜெட் மிகப்பெரியஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரந்தீப் சுர்ஜேவாலா (காங்.):பட்ஜெட்டில் சம்பளம் பெறுவோருக்கு எந்த நிவாரணமும் அளிக்காமல் அவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் துரோகம் செய்துள்ளார். கரோனா பெருந்தொற்று காலத்தில் சதாரண நடுத்தர மக்கள் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நிதியமைச்சரும் பிரதமரும் நேரடி வரி விதிப்பு நடவடிக்கைகளில் சாதாரண மக்களை ஏமாற்றிவிட்டனர்.