ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு மாவோயிஸ்டுகளின் சதி காரணமா என்பதில் பல்வேறு கருத்துகள் கூறப்படுவதால் எது உண்மை என்பதில் குழப்பம் நிலவுகிறது. ரயில்வே துறை அதிகாரிகள் மாவோயிஸ்டுகளின் சதி காரணமாக இருக்கலாம் என்பதை மறுப்பதிற்கில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், முன்கூட்டியே மாவோயிஸ்டுகள் மீது குற்றம் சாட்டக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “சம்பவ இடத்திலுள்ள ரயில்வே அதிகாரிகளுடன் பேசினேன். பிரதமருடன் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. விசாரணைக்கு முன்பே மாவோ யிஸ்டுகளின் சதியே விபத்துக்குக் காரணம் எனக் கூறுவதை அவரும் ஏற்றுக் கொள்ளவில்லை” என்றார்.
அதேசமயம், சரக்கு ரயில் தடம்புரண்டதற்கு மாவோயிஸ்டுகளின் சதி காரணமாக இருக்கலாம் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜிதன்ராம் மாஞ்சி
இவ்விபத்திற்கு மாவோயிஸ்டு களின் சதி காரணமாக இருக்கும் எனக் கூற முடியாது எனத் தெரிவித்துள்ள பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி, மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதியில் ரயிலுக்கு முன்பாக பாதுகாப்பு என்ஜின் ஏன் செல்லவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிஹார் மாநில அரசின் சார்பில் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஹார் முன்னாள் முதல்வர் நிதீஷ்குமார், மாவோயிஸ்டுகளின் சதி என ரயில்வேதுறை எந்த அடிப்படையில் கூறியது எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
சதானந்த கவுடா
இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், “இவ்விபத்துக்கு மாவோயிஸ்டுகள் காரணமா இல்லையா என்பது உள்பட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை தகவல்
மாவோயிஸ்டுகள் ரயில்களைத் தாக்க சதி செய்யக்கூடும் என ரயில்வே அமைச்சகத்தை உளவுத்துறை எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “திர்ஹுத் மற்றும் சரன் கோட்டங்களில் ரயில்வேதுறைக்குச் சொந்தமான சொத்துகள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை ரயில்வே அமைச்சகத்தை எச்சரித்துள்ளது. இதனடிப்படையில், கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் உஷார் படுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.
போக்குவரத்து மாற்றம்
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதால், பல்வேறு ரயில்கள் வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
லால்கார்-புதிய தின்ஸுகியா அவாத் அசாம் எக்ஸ்பிரஸ், உள் ளிட்ட ரயில்கள் வேறு வழித்தடங் களில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.