புதுடெல்லி: இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் கடந்த ஆண்டைப் போல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறள் கூறுவார் என்று பொதுவாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதற்குப் பதிலாக மகாபாரத ஸ்லோகம் கூறினார்.
2023-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். மகாபாரதத்தின் சாந்தி பார்வ அத்தியாயத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை குறிப்பிட்டார். ஆனால் நேரம் கருதி அவர் ஸ்லோகத்தை முழுமையாக உச்சரிக்கவில்லை. அதற்குப் பதிலாக அதன் ஆங்கில மொழியாக்கத்தை மட்டும் வாசித்தார்.
இதுதான் அந்த ஸ்லோகத்தின் பொருள்: "அரசனானவன் குடியானவர்களின் நலனை உறுதி செய்ய சிறிதும் சுணக்கமின்றி அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தர்மத்தின் வழியில் ஆட்சி நடத்த வேண்டும். தர்மத்தின் வழிநின்றே வரி வசூலிக்க வேண்டும்.".
சாந்தி பார்வா என்பது மகாபாரதத்தின் 18 புத்தகங்களில் 12-வது ஆகும். இதற்கு மொத்தம் 3 உப புத்தகங்களும் உள்ளன. 365 அத்தியாயங்களை உள்ளடக்கியது. இதுதான் மகாபாரத இதிகாசத்தின் மிக நீண்ட புத்தகமாகவும் கருதப்படுகிறது.
இதற்கும் பட்ஜெட்டுக்கும் என்ன தொடர்பு? - பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா மகாபாரதம் போன்ற புராதாண நூல்களில் இருந்து பெற்ற ஞானத்தின்படியே வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றார். மேலும், நிலையான கணிக்கக்கூடிய வரிவிதிப்பு என்ற மத்திய அரசின் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் மத்திய பட்ஜெட் 2022-23ல் பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் இருக்கும் என்றார். நேரடி வரி விதிப்புகள் மீதான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை ஒரு நம்பிக்கைக்குரிய வரி முறையை உருவாக்கும் என்று கூறினார்.
அவர் குறிப்பிட்டதைப் போலவே வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை ஆனால், வரி செலுத்துவோர் தங்கள் சரியான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய மதிப்பீட்டு ஆண்டு முடிவில் இருந்து இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட இருக்கிறது. இப்படித்தான் அவர் கூறிய ஸ்லோகத்துடன் வரிவிதிப்புப் பொருந்திப் போவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மிக நீண்ட, மிகச் சுருக்கமான.. மத்திய பட்ஜெட்டில் மிக நீண்ட உரையை வாசித்தவர், மிகக் குறுகிய உரையை வாசித்தவர் என்ற இரண்டு பெருமையையும் ஒருசேர தக்கவைத்துக் கொண்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையாற்றினார். கடைசியில் சில நிமிடங்கள் உடல் நலமின்றி அவர் உரையை குறுக்கி முடித்தார். இதுவே அவர் அதிக நேரம் எடுத்து வாசித்த பட்ஜெட் உரை. ஆனால் அதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு 2 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை வாசித்தார், அதற்கு முன்னதாக 2003-ல் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் வாசித்து ஜஸ்வந்த் சிங் செய்த சாதனையை முறியடித்தார். கடந்த ஆண்டு (2021) ஒரு மணி நேரம் 50 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரை வாசித்தார்.
இந்நிலையில் இன்று வாசிக்கப்பட்ட 2022 - 23 பட்ஜெட் உரை வெறும் 92 நிமிடங்களிலேயே முடிந்தது. இதுதான் இதுவரை வாசிக்கப்பட்ட பட்ஜெட் உரைகளிலேயே குறுகியது எனக் கூறப்படுகிறது. காலை 11 மணிக்கு பட்ஜெட் உரை வாசிக்க ஆரம்பித்த அவர் 8989 வார்த்தைகள் நிரம்பிய உரையை 12.30 மணியளவில் வாசித்து முடித்தார். முழுமையான பட்ஜெட் வரலாற்றில் இதுவே மிகக் குறைவான நேரத்தில் வாசிக்கப்பட்ட பட்ஜெட் உரை.
அதேவேளையில் மத்திய பட்ஜெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நேரத்தில் வாசிக்கப்பட்ட உரை என்றால் 1977 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் ஹிருபாய் முலிஜிபாய் படேல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்த உரை. அந்த உரையில் வெறும் 800 வார்த்தைகள் தான் இருந்தன.