இந்தியா

டெல்லியில் நாய்களை குத்திக் கொன்ற ‘சீரியல் கில்லர்’: தனிப்படை போலீஸாரிடம் சிக்கினார்

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் நாய்களை கத்தியால் குத்திக் கொன்று வந்த ‘சீரியல் கில்லர்’ சிக்கியுள்ளார். தனிப்படை அமைத்து போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் உ.பி.யின் லக்னோவில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் பட்டதாரி அவரது பெயர் நகுல் மிஸ்ரா(28).

டெல்லியின் கிரீன் பார்க் பகுதியில் கடந்த மாதம் நாய்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு கிடந்தன. இதனால், அப்பகுதிவாசிகள் தம் வீட்டு நாய்களின் பாதுகாப்பில் கவலை அடைந்திருந்தனர். இந்த சம்பவம் நடந்த வணிக வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. அதில் இருந்த 20 மதிக்கத்தக்க இளைஞர் மீது ஹோஸ் காஸ் போலீஸார், விலங்கியல் சட்டம் பிரிவு 428, 429 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்காக நான்கு போலீஸார் கொண்ட தனிப்படை அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். கேமிராவில் இருந்து அவர் படத்தை எடுத்து பல இடங்களில் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த கொலையாளி பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என விலங்குகள் தன்னார்வலர் அமைப்பும் அறிவித்திருந்தது. இது குறித்து செய்தி கடந்த மார்ச் 21-ல் ’தி இந்து’ இணையதளத்தில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அந்த கொலையாளியை தாம் பார்த்து, பழகியிருப்பதாக ஒருவர் போலீஸாருக்கு போனில் தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து லக்னோவின் ஆலம் பாக் பகுதியில் வசித்து வந்த நகுல் மிஸ்ரா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரை போலீஸார் தேடி வருவது குறித்து நகுலுக்கு எதுவும் தெரியவில்லை. டெல்லியின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் சில மாதங்களுக்கு முன் அந்த வேலையை இழந்துள்ளார். இவரிடம் பழகி வந்த ஒரு பெண் தோழியின் நட்பும் முறிந்து விட்டிருக்கிறது.

இதனால், வெறுப்படைந்த டெல்லியில் சுற்றிக் கொண்டிருந்த நகுல் நாய்ளை கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், நகுல் நாய்களை மிகவும் நேசிப்பவர் என அவரது பெற்றோர் போலீஸாரிடம் கூறியுள்ளனர். நகுல் மீது பதிவான வழக்குகள் அனைத்தும் ஜாமீன் பெறக்கூடியது. இதனால், கைதான நகுலுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்துள்ளது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT