இந்தியா

தேர்தல்கள் தொடரும்தான்... ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் முக்கியம்: பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: "நாட்டில் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறவே செய்யும்; ஆனால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் முக்கியம்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் 2022 பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், "நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்கிறேன். இன்றைய சர்வதேசச் சூழ்நிலையில் இந்தியாவிற்கு பல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம், அதன் தடுப்பூசிப் பிரச்சாரம் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் நம்பிக்கையை உருவாக்குகின்றன.

இந்த பட்ஜெட் அமர்வில் திறந்த மனதுடன் கூடிய நமது விவாதங்கள், நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகள் உலகளாவிய தாக்கத்திற்கு முக்கிய வாய்ப்பாக அமையும். மரியாதைக்குரிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் திறந்த மனதுடன் நல்ல முறையில் விவாதம் நடத்தி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவதால் அமர்வுகள் மற்றும் விவாதங்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆனால், அனைத்து மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறவே செய்யும், ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது முழு ஆண்டுக்கான திட்டங்களை வரைகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முழு அர்ப்பணிப்புடன் மேலும் பலனளிக்கும் வகையில் நாம் அமைத்தால் , வரும் ஆண்டில் பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும். ஒரு நல்ல நோக்கத்துடன் வெளிப்படையான, சிந்தனை மிகுந்த, விவேகமான விவாதம் இருக்க வேண்டும். இந்த எதிர்பார்ப்புடன், உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT