இந்தியா

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்; ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் - ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஊழலற்ற இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுடன் 85-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசியதாவது:

இன்று காந்தியடிகளின் நினைவு நாளாகும். இந்த நாள் அவரது போதனைகளை நினைவூட்டுகிறது. சில நாட்கள் முன்பு குடியரசு விழாவைகொண்டாடினோம். டெல்லி ராஜபாதையில் நமது வீரர்களின் துணிச்சல், திறமைகளைப் பார்த்து பெருமிதம் அடைந்தோம்.

எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது கண்டிப்பாக தேசிய போர்நினைவுச் சின்னம் சென்று பார்க்க வேண்டுகிறேன். இதன்மூலம் ஆற்றலையும் உத்வேகத்தையும் பெற முடியும்.

பால புரஸ்கார் விருதுகள்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சிறாருக்கு சில நாட்களுக்கு முன்பு ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. சிறிய வயதிலேயே சாதனை படைத்த இவர்கள் குறித்து நமது வீட்டில் உள்ள சிறாருக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் நமது குழந்தைகளுக்கும் உத்வேகம் பிறக்கும். அவர்களும் தேசத்துக்கு நற்பெயர் பெற்றுத் தருவார்கள்.

அண்மையில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் மகாலிங்க நாயக். கர்நாடகத்தை சேர்ந்த விவசாயியான இவர், சுரங்க மனிதன் என்று அழைக்கப்படுகிறார். தனது வயல்களில் இவர் செய்திருக்கும் புதுமையைப் பார்ப்பவர்கள் அனைவரும் திகைத்துப் போகின்றனர்.இவரை போன்று பல்வேறு சாதனைகளை படைத்த பத்ம விருது பெற்றவர்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களால் நமது வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிறார்தங்களுடைய கருத்துகளை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி உள்ளனர். அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து நவ்யா வர்மா அஞ்சல் அட்டை அனுப்பியுள்ளார். வரும் 2047-ம் ஆண்டு அனைத்து இந்தியருக்கும் கவுரவமான வாழ்க்கை கிடைக்க வேண்டும்,விவசாயிகள் தன்னிறைவு பெற்றவர்களாக வேண்டும். ஊழல் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்றுதனது கனவைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த கனவை நோக்கி தேசம் விரைவாக முன்னேறி செல்கிறது.

ஊழல் என்ற கரையான் தேசத்தை அரிக்கிறது. இதிலிருந்து விடுதலை அடைய 2047 வரை ஏன் காத்திருக்க வேண்டும், ஊழலற்ற இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவரவர் கடமைகளுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். எங்கே கடமை உணர்வு இருக்கிறதோ, அங்கே ஊழலின் சாயல்கூட படியாது.

சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிமின் கனவு வித்தியாசமானது. வரும் 2047-ம் ஆண்டில் பாதுகாப்புத் துறையில் இந்தியா ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார். நிலவில் ஆய்வு தளம் அமைக்க வேண்டும், செவ்வாயில் மனிதர்களை குடியேற்ற வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உங்களைப் போன்ற இளைஞர்கள் இருக்கும் நாட்டில் எதையும் சாதிக்க முடியும்.

4.5 கோடி சிறாருக்கு தடுப்பூசி

கரோனாவின் புதிய அலையோடு வெற்றிகரமாகப் போராடி வருகிறோம். 4 வாரங்களுக்குள் 4.5 கோடிசிறாருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது 15 முதல் 18 வயது வரையிலான பிரிவில் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் ஒரு கோடிபேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கரோனா தொற்றுகுறையத் தொடங்கி இருக்கிறது. இது ஆக்கப்பூர்வமான அறிகுறி ஆகும். இந்த நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேநேரம் தேசத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளின் வேகமும் அதிரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

SCROLL FOR NEXT