தம் இளைய சகோதரியான பிரியங்கா வதேராவை தீவிர அரசியலுக்கு வரும்படி பலமுறை அழைத்து விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான அவர் இது குறித்து உபியின் அமேதிவாசிகளிடம் மனம் திறந்து பேசினார்.
உபியின் அமேதி தொகுதியின் மக்களவை எம்பியான ராகுல் காந்தி இங்கு இரண்டு நாட்களுக்காக விஜயம் செய்துள்ளார். அப்போது, அமேதியின் கிராமமான கொஹராவின் மக்கள் சபையில் பேசினார்.
அப்போது ராகுல் கூறுகையில், ‘தீவிர அரசியலில் இறங்குமாறு நான் எனது சகோதரி பிரியங்காவிடம் பலமுறை கூறி விட்டேன். ஆனால், அவர் ஒவ்வொரு முறையும் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். எனது இந்த கோரிக்கைக்கு அவர் மறுப்பு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என விரும்புகிறேன். இதை அவருக்கு நான் எடுத்து மட்டுமே கூற முடியும். ஆனால், நீங்கள் இதற்காக அவரிடம் பேசி சம்மதிக்க வைக்க முடியும்.‘ எனத் தெரிவித்தார்.
ராகுலுக்கு முன்பாக தன் தாய் சோனியாவிற்காக தேர்தல் பணிகளில் பிரியங்கா ஈடுபட்டு வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திடீர் என அரசியலில் குதித்த ராகுலுக்கும் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா செயல்பட்டு வருகிறார். இவர் தம் பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நடை, உடை மற்றும் பாவனைகளில் இருப்பதாக உபிவாசிகள் பெருமிதம் கொள்வது உண்டு. இதனால் பிரியங்காவை அரசியலில் குதிக்க கூறி அவ்வப்போது வற்புறுத்துவது உண்டு.
இதை, அலகாபாத்தின் காங்கிரஸ் கட்சியினரும் ஒவ்வொரு தேர்தல் சமயங்களிலும் தொடர்ந்து பிரியங்காவை வலியுறுத்தி பேனர்களை அமைத்து வருகின்றனர். ஆனால், இவை யாருக்கும் பிரியங்கா இதுவரை செவி சாய்க்கவில்லை. இந்த விஷயத்தில் ராகுலும் பிரியங்காவை வற்புறுத்தி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 1989 வரை சுமார் 20 முறை உபியில் முதல் அமைச்சர்களை அமைத்த காங்கிரஸால் அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் உள்ளது. தற்போது உபியில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்ட காங்கிரஸ் அங்கு அரும்பாடுபட்டு ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது. இதற்காக, பிஹாரின் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கட்சியின் தேர்தல் ஆலோசகராக இருந்த பிரஷாந்த் கிஷோரை தமக்கு அமர்த்தி உள்ளது காங்கிரஸ். இவர் 2017 உபி சட்டப்பேரவை தேர்தலில் பிரியங்காவை காங்கிரஸ் முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தும்படி ஆலோசனை அளித்திருந்தார். ஆனால், இவரது கருத்த நிராகரித்த சில மூத்த தலைவர்கள், பிரியங்கா பிரதமர் வேட்பாளாராக முன்னிறுத்தத் தகுதியானவர் எனக் கருத்து கூறி இருந்தனர்.