இந்தியா

எம்.பி.க்கள் தத்தெடுக்கும் கிராமங்களை மேம்படுத்த நிதிச் சிக்கல்: தலா ரூ.50 லட்சம் அளிக்க பிரதமர் ஆலோசனை

ஆர்.ஷபிமுன்னா

எம்.பி.க்களால் தத்தெடுக்கப்படும் கிராமங்களை நிதிப் பற்றாக்குறை காரணமாக மேம்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. இதை சமாளிக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ.50 லட்சம் வளர்ச்சி நிதி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்து வருகிறார்.

நாட்டின் முதுகெலும்பான கிராமங்களை முன்னேற்ற பிரதமர் மோடி கடந்த 2014, அக்டோபரில் எம்.பி.க்கள் முன்மாதிரி கிராம திட்டத்தை (சன்ஸத் ஆதர்ஷ் கிராம் யோஜனா) அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில் ஒவ்வொரு எம்.பி.யும் 2015-16-ம் நிதியாண்டில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து மேம்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. 2019-க்குள் இதை மேம்படுத்திய பின் மேலும் இரு கிராமங்களைத் தத்தெடுக்கலாம் எனக் கூறியிருந்தார்.

இதற்காக மத்திய அமைச்சகங்களின் திட்ட நிதி மற்றும் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. என்றாலும் மற்ற கிராமங்களை விட முன்மாதிரி கிராமங்களை உருவாக்க நிதிப் பற்றாக்குறை தடையாக உள்ளதாக புகார் எழுந்தது. இதை சமாளிக்க முன்மாதிரி கிராமங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஒதுக்க அதிகாரிகளுடன் மோடி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு 5 மாநில தேர்தலுக்குப் பின் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மாநிலங்களவை உறுப்பினரும் பகுஜன் சமாஜ் தேசிய பொருளாளருமான அம்பேத்ராஜன் கூறும்போது, “நிதிச்சுமை குறித்து எம்.பி.க்கள் தரப்பில் தொடக்கம் முதலே புகார் நிலவி வந்தது. இதற்காக தற்போது அளிக்கப்படும் ரூ.50 லட்சம் முன்மாதிரி கிராமம் அமைக்க நிச்சயம் போதாது. சாலை போன்ற அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக எங்களின் அலைச்சலுக்கு உரிய பலன் கிடைப்பதில்லை” என்றார்.

நாடாளுமன்ற இரு அவைகளின் 698 உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். இதில் மக்களவை உறுப்பினர்கள் 499 கிராமங்களையும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 199 கிராமங்களையும் தத்தெடுத்து உள்ளனர். மேற்கு வங்கத்தின் 54 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 97 பேர் இதுவரை எந்தக் கிராமத்தையும் தத்து எடுக்கவில்லை. இதற்கு அதை மேம்படுத்துவதில் உள்ள பல சிக்கல்கள் காரணமாகக் கூறப்படுகிறது.

தற்போது பிரதமர் மோடி அளிக்கவிருக்கும் ரூ. 50 லட்சம் நிதிக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்கான அறிவிப்பு ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்தபின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT