உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர், மீரட், காஜியாபாத், ஹர்பூர், கவுதம புத்தர் நகர், புலந்த்ஷாகர், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் காஜியாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “முந்தைய உத்தரபிரதேச அரசு (அகிலேஷ் யாதவ் அரசு) காஜியாபாத்தில் ஹஜ் இல்லம் கட்டியது. ஆனால் பாஜக அரசு காஜியாபாத்தில் ரூ.94 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கைலாஷ் மானசரோவர் பவனை கட்டியுள்ளது.
நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் இந்தக் கட்டிடம் பக்தர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. முன்பெல்லாம் வியாபாரிகளை மாஃபியாக்கள் துன்புறுத்தி வந்தனர்.
ஆனால் இப்போது எந்த வொரு வணிகர், மருத்துவர் அல்லது ஏழையின் சொத்தை அபகரிக்க எந்த மாஃபியாவும் துணிவதில்லை” என்றார்.
சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவை முதல்வர் யோகி நேற்று முன்தினமும் விமர்சித்தார். இது தொடர்பாக யோகி கூறும்போது, “அவர்கள் ஜின்னாவை வழிபடு பவர்கள். ஆனால் நாம் சர்தார் படேலை வழிபடுகிறோம். அவர் களுக்கு பாகிஸ்தானை மிகவும் பிடிக்கும். ஆனால் நாம் பாரத தாய்க்காக உயிரை தியாகம் செய்யக் கூடியவர்கள்” என்றார்.
யோகி ஆதித்யநாத் நேற்று தனது காஜியாபாத் பயணத்துக்கு முன்னதாக, மேற்கு உ.பி.யில் தனது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை ட்விட்டரில் பட்டிய லிட்டிருந்தார்.