இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் அனந்த குமார்

இரா.வினோத்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய உர மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறுகையில், ''தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது போன்ற எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.அது தொடர்பாக இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு அத்தகைய திட்டத்தை உருவாக்க எவ்வித தகவலும் அனுப்பவில்லை.

மேலும் மத்திய அரசு ஒருபோதும் கர்நாடகாவிற்கும் கர்நாடக மக்களுக்கும் எதிராக செயல்படாது.காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய செய்தி வெறும் வதந்தியே''என கூறினார்.

வந்தார் வாட்டாள் நாகராஜ்

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,காவிரி நீர்பாசன உரிமையை பாதுகாக்க கோரியும் கார்நாடகாவில் பல இடங்களில் சனிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றது. பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பா.ஜ.க.அரசியல் செய்யப்பார்க்கிறது. உடனடியாக இத்திட்டத்தை கைவிடாவிட்டால் தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.

இந்நிலையில் பெங்களூரில் பேசிய கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் பிரகலாத் ஜோஷி, ''நான் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அத்துறைக்கு பொறுப்பான மத்திய அமைச்சர் உமா பாரதியிடம் தொலைபேசியில் பேசினேன். அதற்கு அவர் அத்தகைய சுற்றறிக்கை எதையும் பிரதமர் அலுவலகம் அனுப்பவில்லை.

எங்களுடைய அமைச்சகத்திற்கு காவிரி குறித்த தகவல் வந்தால், கர்நாடக பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசனை நடத்தாமல் நடவடிக்கை எடுக்க மாட்டேன்'' என உமாபாரதி உறுதியளித்த‌ததாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT