இந்தியா

சிறுபான்மை பற்றி ஹமீது அன்சாரி பேச்சு: அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்ட மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அண்மையில் இந்திய - அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் சார்பில் நடைபெற்ற காணொலி வழி குழு விவாதக் கூட்டத்தில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றார். அவர் பேசும் போது, “நாட்டில் அதிகரித்து வரும் ‘இந்து தேசியவாதம்’ என்ற போக்கு கவலை அளிக்கிறது. குடிமக்களை வேறுபடுத்தி பார்ப்பது, சகிப்புத் தன்மையின்மை மற்றும் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தி நடைபெறும் சம்பவங்கள் நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது’’ என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: 2014-க்கு முன்பு நாட்டில் அடிக்கடி வகுப்புக் கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் சாதாரணமாக நிகழ்ந்து வந்தன. ஆனால் தற்போது நாடு அந்தச் சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக உள்ளது. ஓரிரண்டு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அது தனிப்பட்ட நிலையிலும் சமூகத்தின் நிலையிலும் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சீரிய தலைமையில் நாடு அமைதியான நிலையில் உள்ளது.

இந்த விஷயத்தில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறுவது தவறு. நானும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன்தான். இந்திய ஒரு பாதுகாப்பான நாடு .நமது மகத்தான தேசத்துக்கு நன்றியுடன் இருப்போம். இவ்வாறு கிரண் ரிஜுஜு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT