புதுடெல்லி: ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு கடந்த 10-ம்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், சுகாதார, முன்கள ஊழியர்களுக்கு 3-ம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 19 நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல 15 வயது முதல் 18 வயது வரையிலான பிரிவில் சுமார் 60 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவ, மாணவியரை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பிடிஐ