சண்டிகர்: காங்கிரஸின் பஞ்சாப் மாநில தலைவரான நவ்ஜோத் சிங் சித்து தனது பெற்ற தாயை கைவிட்டதால் அவர் ஆதரவற்றவராக ரயில்வே நிலையத்தில் இறந்தார் என அவரின் சொந்த சகோதரி குற்றம் சுமத்தியுள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகக் கூறப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு காங்கிரஸையும், சித்துவையும் ஆட்டிப்படைக்கிறது.
பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மீது அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் சித்துவின் சகோதரி சுமன் தூர், இன்று செய்தியாளர்கள் மத்தியில் தன் சகோதரரை 'கொடூரமான நபர்' என்று குற்றம் சுமத்தினார். சித்து தொடர்பாக மேலும் பேசிய சுமன் தூர், "1986-ல் எங்கள் தந்தையின் மரணத்திற்குப் பிறகு எங்களின் வயதான தாயை சித்து கைவிட்டார். தாயை கவனிக்கவில்லை சித்து. இதனால், எனது தாய் 1989-ம் ஆண்டு டெல்லி ரயில் நிலையத்தில் ஓர் ஆதரவற்றவராக மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்துகிடந்தார்.
பணத்துக்காக சித்து எனது தாயை கொன்றுவிட்டார். எங்களை கைவிட்ட பிறகு எனது தாயும் சரி, நானும் சரி சித்துவிடம் எந்த உதவியும் கேட்டுச் செல்லவில்லை" என்று கூறும்போதே கண்ணீர் வடித்தார். முன்னதாக, சித்து சில ஆண்டுகள் முன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தனக்கு இரண்டு வயதாக இருந்தபோது, அவர்களது பெற்றோர்கள் பிரிந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தக் கூற்றை மறுத்த சுமன் தூர், "உண்மையில் சித்துவுக்கு அப்போது 2 வயது கிடையாது.
அது தவறான தகவல். அந்தப் பேட்டியை பார்த்துவிட்டு எனது தாய் சித்துவை நேரில் சந்தித்து ஏன் பொய் கூறினாய் என்று கேள்விகேட்டார். தான் அப்படி கூறவில்லை, பொய்யான தகவலை யாரோ எழுதியுள்ளார்கள் என அன்று சித்து என் தாயை சமாளித்தார். இதன்பின் அந்த பத்திரிக்கை மீது என் தாய் வழக்கு தொடுத்தார். குடும்ப சொத்தை யாருக்கும் கொடுக்காமல் தானே அனுபவிக்க வேண்டும் என தாயை பிரிந்து நாடகமாடினார். கடந்த 20ம் தேதி நான் சித்துவை சந்திக்கச் சென்றேன். சந்திப்பு முயற்சி தோல்வியடைந்ததால் இப்போது மீடியாவை சந்திக்கும் நிலை ஆளாகியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
சுமன் தூரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கவுரி, "எனது கணவரின் தந்தைக்கு இரண்டு திருமணம் நடந்தது. அதில் மூத்த மனைவியின் மூலம் 2 மகள்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த இரு மகள்கள் பற்றி அவ்வளவாக எங்களுக்குத் தெரியாது" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸின் பஞ்சாப் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் அவர் மீது கிளம்பியுள்ள புதிய சர்ச்சை காங்கிரஸையும், குறிப்பாக நவ்ஜோத் சிங் சித்துவையும் கலங்கவைத்துள்ளது.