போராட்டம் நடத்திய பாஜக எம்எல்ஏக்கள்- கோப்புப் படம் 
இந்தியா

12 மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் 

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 12 எம்எல்ஏக்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு நடந்தபோது கடும் அமளி, கூச்சல் ஏற்பட்டது. ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால், பாஜக எம்எல்ஏக்களுக்கு உரிய நேரத்தில் வாய்ப்பளிக்கிறேன், அமைதியாக அமரும்படி சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஆனால், பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் பேச்சைக் கேட்காமல் அவர் இருக்கை அருகே சென்று கூச்சலிட்டனர். இதில் சிலர் அவரைத் தாக்கவும் முயன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ், வரம்பு மீறிச் செயல்பட்ட 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களையும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக தீர்மானத்தைச் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் கொண்டுவந்து, நிறைவேற்றினார். இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதன்படி, பாஜக எம்எல்ஏக்கள் சஞ்சய் குடே, ஆஷ்ஸ் ஷெல்லர், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அடுல் பாட்கால்கர், பராக் அலாவனி, ஹரிஷ் பிம்பாலே, யோகேஷ் சாகர், ஜெய் குமார் ராவத், நாராயண் குச்சே, ராம் சத்புதே, பண்டி பாங்டியா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 12 எம்எல்ஏக்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது. சஸ்பெண்ட் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் நியாயமற்றது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT