பாட்னா: பிஹார் ரயில்வே பணியாளர் தேர்வு எதிர்ப்பு வன்முறை போராட்டம் தொடர்பாக யூடியூப் சேனல் நடத்தி வரும் 'கான் சார்' என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை வன்முறைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கான் சார், அம்மாநிலத்தில் பிரபலமான நபராக அறியப்படுபவர். அவர் மீதான வழக்குப் பதிவு, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. அரசியல்வாதிகளும் அவர் மீதான வழக்குப் பதிவை எதிர்த்துள்ளதால் பிஹார் மாநிலத்தில் இது முக்கிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் 2021-ம் ஆண்டுக்கான என்டிபிசி (Non-Technical Popular Categories) தேர்வை 2 கட்டங்களாக நடத்த ரயில்வே முடிவு செய்ததற்கு எதிராக பிஹாரில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அறிவிப்பாணையில் ஒரு தேர்வு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் 2-ம் கட்ட தேர்வு தங்கள் எதிர்காலத்தோடு விளையாடுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அறிவிப்பாணையில் 2-ம் கட்ட தேர்வு குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் 73-வது குடியரசு தினமான நேற்றும் பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்களை மறித்தும் ரயில்கள் மீது கற்களை வீசியும் இவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கயாவில் காலி ரயில் ஒன்றுக்கு மாணவர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மாணவர்களின் போராட்டத்தால் தேர்வை ரயில்வே வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. மாணவர்களின் கருத்துகளை கேட்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், ரயில்வே பணிக்கு வர வாழ்நாள் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதனிடையே, இந்த வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக பிஹாரின் பிரபல யூடியூபர் கான் சார் என்பவர் மீது அம்மாநில காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தும் யூடியூபர் கான், போராட்டத்தின்போது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டது. போராட்டம் நடத்த மாணவர்களை யூடியூபர் கான் தூண்டியதாகக் கூறப்படும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பேசியுள்ள யூடியூபர் கான், "எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, வன்முறையில் எனது பங்கு இருந்தால், நீங்கள் என்னை கைது செய்யுங்கள். ரயில்வே பணியாளர் வாரியமே இந்த போராட்டம் வன்முறையாக மாறியதற்கு பொறுப்பு. ரயில்வே வாரியத்தின் முடிவு பட்டதாரி மாணவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'சாலைகளில் திரண்டு போராடினால் மட்டுமே ரயில்வே தேர்வு ரத்து செய்யப்படும்' என கான் சார் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மாணவர்களின் வாக்குமூலம் மற்றும் வைரல் வீடியோக்கள் போன்றவற்றை பார்க்கும்போது கான் சார் உள்ளிட்ட அவரின் பயிற்சி மைய ஆசிரியர்கள் பாட்னாவில் வன்முறையை தூண்டிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "போராட்டத்தை தூண்டிவிட கான் சார் பரப்பிய வீடியோவை நாங்கள் பெற்றுள்ளோம்" என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடக தகவல்கள் சொல்கின்றன.
யூடியூபர் கான் சார் யார்?
பிஹார் தலைநகர் பாட்னாவில் 'கான் ஜிஎஸ் ரிசர்ச் சென்டர்' என்ற பெயரில் பிரபலமான பயிற்சி மையத்தை நடத்தி வருபவரே இந்த கான் சார். இதே பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் இவர், அதன்மூலமாக போட்டித்தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவரது யூடியூப் சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தைத் தாண்டி உள்ளது. தனித்துவமான கற்பித்தல் பாணி, பிஹாரின் பேச்சுவழக்கு உள்ளிட்டவற்றால் அம்மாநில இளைஞர்கள் மத்தியில் அவர் அதிக பிரபலம்.
என்றாலும், அவரின் உண்மையான பெயர் எதுவென்று தெரியவில்லை. கான் சார் என்பது அவரின் உண்மையான பெயர் கிடையாது. அவரது பெயர் அமித் சிங் என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் அவரது பெயர் பைசல் கான் என்றும் அவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் வசிப்பவர் என்றும் கூறுகின்றனர்.
யூடியூப் சேனலை தொடங்கியதிலிருந்து இதுவரை அவர் தனது உண்மையான பெயரை வெளியிடவில்லை. எனினும் சமீபத்திய பேட்டிகளின் போது, தனது உண்மையான பெயர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு, `நேரம் வரும்போது, அனைவருக்கும் என் உண்மையான பெயர் தெரியும்' என்று பேசியுள்ளார். தற்போது போலீஸ் வழக்குப்பதிவை அடுத்து கான் சார் தலைமறைவாகி உள்ளார். இவருக்கு ஆதரவாக ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருவதும் கவனிக்கத்தக்கது.