அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல்போன சிறுவனை இந்திய ராணுவத்திடம் சீன ராணுவம் ஒப்படைத்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது தொடர்பான படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மத்திய சட்ட அமைச்சர் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், “காணாமல் போன அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனை, இந்திய ராணுவத்திடம் சீன ராணுவம் ஒப்படைத்துள்ளது. சீன ராணுவத்தை தொடர்புகொண்டு சிறுவனை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வந்ததற்காக இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சீன ராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன” என்று பதிவிடுள்ளார்.
முன்னதாக, அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சியாங் மாவட்டத்தின் ஜிடோ கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் மிரம் தரோன், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்டையாடச் சென்றபோது சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவம் மத்திய அரசுவட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காணாமல் போன அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியிருந்தது. இது தொடர்பாக, சீன ராணுவத்திடம் இந்திய ராணுவம் பேசிவந்த நிலையில், தற்போது அச்சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.