இந்தியா

பாகிஸ்தான் சிறையில் மர்ம மரணமடைந்த கிருபால் சிங்கின் உடல் இந்தியாவிடம் ஒப்படைப்பு

ஐஏஎன்எஸ்

பாகிஸ்தான் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிருபால் சிங்கின் உடல் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிருபால் சிங் (50), கடந்த 1992-ல் வழி தவறி பாகிஸ்தான் எல்லைக் குள் நுழைந்ததாக கைது செய்யப் பட்டார். அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் உளவு பார்க்க வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 1992 முதல் லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் கிருபால் சிங் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கிருபால் சிங் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். கிருபால் சிங் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதே சமயம் அவரை சிறை அதிகாரிகள் யாரும் சித்ரவதை செய்யவில்லை என்றும் மாரடைப்பால் அவருக்கு மரணம் நேரிட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் லாகூரில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி வாகா எல்லை வழியாக கிருபால் சிங்கின் உடல் கொண்டு வரப்பட்டு, இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT