புதுடெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி, பிரபல கிரிக்கெட் வீரர்களான ஜான்டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோருக்கு அந்நாட்டுடனான ‘ஆழ்ந்த தொடர்பை’ வெளிப்படுத்தும் விதமாக கடிதம் எழுதியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். மேலும் அவர் தனது மகளுக்கு ‘இந்தியா’ எனவும் பெயர் சூட்டியுள்ளார். அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் கெயில், ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவராவார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜான்டி ரோட்ஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எனது குடியரசு தினவாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பல ஆண்டுகளாக, இந்தியா மற்றும் அதன்கலாச்சாரத்துடன் நீங்கள் ஆழமான தொடர்பை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த மகத்தான தேசத்தின் பெயரை உங்கள் மகளுக்கு நீங்கள் வைத்ததில் இருந்து இந்த உண்மை பிரதிபலிக்கிறது. நீங்கள் உண்மையிலேயே எங்கள் நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவுகளின் சிறப்பு தூதர்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த கடிதத்துக்கு ஜாண்டி ரோட்ஸ்,கிறிஸ் கெயில் ஆகியோர் நன்றிதெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜான்டி ரோட்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “மிகவும் அன்பான வார்த்தைகளுக்கு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்திய வருகையின் போதும் நான் ஒரு தனி மனிதனாக மிகவும் வளர்ந்துள்ளேன். இந்திய மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மதித்து எனது முழு குடும்பமும் குடியரசு தினத்தை இந்தியாவுடன் கொண்டாடுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ் கெயில் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் 73-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை கேட்டே நான் விழித்தேன், இது அவருடனும் இந்திய மக்களுடனும் எனது நெருங்கிய தனிப்பட்ட உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அனைவருக்கும் இந்த யுனிவர்சல் பாஸின் அன்பான வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.
- பிடிஐ