புதுடெல்லி: காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஐந்து நாள் மட்டும் பணி என மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதன் முதல் அமைச்சரான பூபேந்தர் பகேல், குடியரச்தின பரிசாக இன்று அறிவித்துள்ளார்.
இன்று குடியரசுதினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநில முதல்வரான பூபேந்தர் பகேல், பஸ்தர் காடுகளில் அமைந்த மாவட்டத்தின் ஜெக்தால்பூரில் தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பிறகு சிறப்பு உரையாற்றியவர் அரசு அலுவலர் மற்றும் பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
சத்தீஸ்கர் மாநில அரசு அலுவலகங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை என வாரத்தில் ஆறு நாள் பணி நடைபெற்று வருகிறது. இதை மாற்றி திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் என ஐந்து நாள் பணியாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அதன் முதல் அமைச்சரான பூபேந்தர் பகேல் இன்று வெளியிட்டுள்ளார். இது அம்மாநில அரசு அலுவலர்களுக்கான குடியரசுதினப் பரிசாக அமைந்துள்ளது.
இது குறித்து தனது முதல்வர் பகேல் தனது குடியரசுதின உரையில் பேசியதாவது: கூலித் தொழிலாளர்களின் பெண் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு திட்டம் அமலாக்கப்படும்.
இத்திட்டத்தில், ஒரு தொழிலாளியின் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பேரில் தலா ரூ.20,000, தேசிய வங்கிகளின் வைப்புத்தொகையாக அரசு செலுத்தும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அதை விரைவாக அளிக்கப்படும். இவற்றை பெறும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பாக மாநிலம் முழுவதிலும் புதியவகை போக்குவரத்துகள் அறிமுகம் செய்யப்படும்.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அனைத்து வகை கட்டிடங்களையும் முறைப்படுத்த புதிய விதிமுறைகள அமலாக்கப்படும். முனிசிபல் நகர எல்லைகளுக்கு அப்பால் அமையும் 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்கு உனடியாக இணையதளம் வாயிலாக அனுமதி அளிக்கப்படும்.
அரசு அலுவலர்களுக்கானப் புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு சார்பிலானப் பங்கை 10 சதவிதத்திலிருந்து 14 என உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் பாதுகாப்பிற்கானத் தனிப்பிரிவுகள் அமைக்கப்படும்.
மேலும் குடியரசுதினப் பரிசாக அரசு அலுவலகங்களின் வேலைநாட்கள் ஐந்து தினங்களாகக் குறைக்கப்படுகிறது. இவை இனி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை மட்டும் வரையே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.