புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் பாஜக 65, அமரீந்தர் சிங் கட்சி 37, எஸ்ஏடி சன்யுக்த் கட்சி 15 இடங்களில் போட்டியிடுகின்றன.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்.20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று முன்தினம் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி) தலைவரும் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) தலைவர் எஸ்.எஸ்.தின்ட்சா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஜே.பி.நட்டா கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பில் பஞ்சாப் முன்னிலை வகிக்கிறது. பஞ்சாபுக்கு இப்போது சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. இங்கு மத்தியஅரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட இரட்டை இன்ஜின் அரசுதேவைப்படுகிறது. இதற்காக நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். வரும் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117-ல் பாஜக 65 இடங்களிலும் பிஎல்சி 37 இடங்களிலும் எஸ்ஏடி (சன்யுக்த்) 15 இடங்களிலும் போட்டியிடும்” என்றார்.
அமரீந்தர் சிங் கூறும்போது, “பஞ்சாபில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இங்கு நாசவேலைகளை நிகழ்த்துவதற்காக ஏராளமான ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன. எனவே, மாநில நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதி 3 கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன” என்றார்.
- பிடிஐ