இந்தியா

வாக்குறுதிப்படி கொல்லருக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா

செய்திப்பிரிவு

மும்பை: இரும்பு வேலை செய்யும் கொல்லர் ஒருவருக்கு தான் வாக்குறுதி அளித்தபடி பொலேரோ எஸ்யுவி காரை பரிசாக அளித்துள்ளார் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் லோஹர். இவர் கடந்த ஆண்டு தனது குழந்தைகள் ஆசைப்பட்டதற்காக இருக்கும் வளங்களைக் கொண்டு ஒரு காரை வடிவமைத்திருந்தார். அதாவது இரு சக்கர வாகன என்ஜின், ரிக்ஷா சக்கரங்கள் மற்றும்இவராக உருவாக்கிய ஸ்டியரிங் சக்கரம் இவற்றைக் கொண்டு நான்கு சக்கர வாகனத் தோற்றத்தில் வடிவமைத்த வாகனம் மிகவும் வைரலாக பரவியது. இதைப் பார்த்த ஆனந்த் மஹிந்திரா, இருக்கும் வளங்களைக் கொண்டு எவ்விதம் புதிய தயாரிப்புகளை வடிவமைப்பது என்பதற்கு இந்த கார் உருவாக்கம் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த ஏழை கொல்லருக்கு பொலேரோ காரை பரிசளிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

கொல்லர் வடிவமைத்த அந்த காரை தங்களது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் வைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சாங்லி மாவட்டத்தில்உள்ள சஹ்யாத்ரி மோட்டார் நிறுவனத் திலிருந்து பொலேரோ கார் லோஹருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல அவர் வடிவமைத்த கார் அந்தவிற்பனையகத்துக்கு அளிக்கப்பட்டது. லோஹர் வடிவமைத்த அந்த கார் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு விற்பனையகத்தில் இடம்பெற்றிருந்தது. விரைவிலேயே அந்த கார் மஹிந்திரா ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிடம் இருக்கும் வசதியைக் கொண்டு ஏதாவது உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் தனக்கு உண்டு என்றும், குழந்தைகளுக்காக இந்தக் காரை வடிவமைத்ததாகவும் லோஹர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT