திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 2 டோஸ் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கரோனா இல்லை என்பதற்காக ஆர்டிபிசிஆர் மருத்துவ சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
இந்த சான்றிதழ் தரிசனத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதமே தேவஸ்தானம் அறிவித்தது. இத்திட்டம், கடந்த அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து அமலில் உள்ளது. என்றாலும் பக்தர்கள் பலர் ஆன்லைனில் டிக்கெட் கிடைத்தால் போதுமானது எனக்கருதி திருமலைக்கு வந்து விடுகின்றனர். இவர்கள் சில சமயம்சுவாமியை தரிசிக்க இயலாமலேயே ஊருக்கு திரும்பிச் செல்ல நேரிடுகிறது. இந்த சங்கடத்தை தவிர்க்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கண்ட கரோனா நிபந்தனையை தற்போது கட்டாயமாக்கி உள்ளது.
தரிசன டிக்கெட்டுடன் 2 டோஸ்தடுப்பூசி சான்றிதழ் அல்லது ஆர்டிபிசிஆர் சான்றிதழ் இல்லாதவர்கள் அலிபிரி சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப் பப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முன்தினம் அறிவித்தது.