இந்தியா

பத்ம விருதுகள் 2022: செளகார் ஜானகி முதல் சுந்தர் பிச்சை வரை; விருது பெறும் தமிழர்கள்- முழு விவரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2022ம் ஆண்டுகளுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் நடிகை சௌகார் ஜானகி வரை பலர் தேர்வாகியுள்ளனர்.

மத்திய அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள், உயரிய பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். நாளை குடியரசு தின விழா கொண்டாட்டங்களை நடைபெறவுள்ளதை அடுத்து 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

* தமிழ் இலக்கியவாதி, கவிஞர் என பன்முகம் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு இலக்கியம் பிரிவின் கீழ் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* கிராமாலயா என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் எஸ்.தாமோதரன் என்பவருக்கு சிறந்த சமூக பணிக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* தென்னிந்தியத் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகையாக விளங்கிய பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் கலை சேவையை பாராட்டும் வகையில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சௌகார் ஜானகி

* பழங்கால நடன வடிவமான சதிர் நடனக்கலைஞர் திருச்சியைச் சேர்ந்த ஆர்.ஆர் முத்துகண்ணமாளுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* இதே திருச்சியைச் சேர்ந்த கர்நாடக நாதஸ்வர கலைஞர் ஏ.கே.சி நடராஜனுக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வீராச்சாமி சேஷய்யா என்பவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரமான மோகனூரில் பிறந்து இந்தியாவின் டாப் நிறுவனமான டாடா குழுமத்தின் சிஇஓவாக உள்ள நடராஜன் சந்திரசேகரனுக்கு வர்த்தகத்தில் சிறந்து விளங்குவதற்காக பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்து உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT