வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதோர் பெயர்களை வெளியிடா விட்டாலும் தொகையை வெளியிடலாமே: ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
வங்கிக் கடனை திருப்பி செலுத்தாது மோசடி செய்பவர்கள் பெயர்களை வெளியிடுவதில் சிக்கல் இருந்தால் குறைந்தது அவர்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற மிகப்பெரிய கடன் தொகையையாவது பொதுமக்களுக்கு அறிவிக்கலாமே என்று மத்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதாவது ரூ.500 கோடி மற்றும் அதற்கும் மேலான கடன் தொகையைச் செலுத்தாதவர்களின் தொகை விவரங்களை ஆர்பிஐ வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கூறும்போது, “ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளில் கடனாகப் பெற்று பிறகு திவால் நோட்டீஸ் கொடுத்து விடுவது எதற்காக? பிற நிதி ஆதாரங்களிலிருந்து மேலும் நிதி திரட்டத்தான். அதாவது ஏழை விவசாயிகள் கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அதே வேளையில் இதுவும் நடந்து வருகிறது” என்றார்.
மேலும் வங்கிகளுக்கும், அவர்களது பணக்கார வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான ரகசியக்காப்பு எத்தகையது என்றும், இது எந்த அளவுக்கு அவர்கள் பெயர்களையோ, அவர்கள் திருப்பிச் செலுத்தாத தொகையையோ வெளியிடவிடாமல் செய்கிறது என்றும் இது எப்படி நீதித்துறை உத்தரவையும் தடுக்கிறது என்பதையும் பெரிய அளவில் விரிவான விசாரணை நடத்துவோம் என்று உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்தது.
மேலும், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“நீங்கள் ஏப்ரல் 26-ம் தேதி இந்த விவகாரங்களை தெளிவாக வடிவமைக்க வேண்டும். கடன் தொகையை வெளியிடுவது பற்றிய தீவிர விவகாரங்களில் நாம் ஒரு கவனமான வெளிப்படையான விவாதம் நடத்துவோம். ரூ.500 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்கள் பெயரையோ, தொகையையோ வெளியிட முடியாத அளவுக்கு ஏதாவது ரகசியக்காப்பு இருக்கிறதா என்பதே முதல் கேள்வி” என்று கூறினார் நீதிபதி டி.எஸ்.தாக்கூர்.
பொதுநல வழக்கு மையம் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு இது குறித்து செய்திருந்த மனுவின் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது. அதாவது வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர்களையும், தொகை உள்ளிட்ட விவரங்களையும் வங்கிகள் வெளியிட வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான், “மொத்த கடன் தொகையை தெரிவிக்கலாம் அல்லவா? கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர்களை நாம் ரகசியமாக வைத்திருப்போம் ஆனால் தொகைகளை வெளியிடலாம் அல்லவா?” என்று நீதிபதி டி.எஸ்.தாக்கூர் ஆர்.பி.ஐ.-யிடம் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஆர்பிஐ வழக்கறிஞர், தகவல்கள் பரஸ்பர நம்பகத்தன்மையின் அடிப்படையில் பெறப்படுகின்றன, இதனால் வெளிப்படையாக விவரங்களை தெரிவிப்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதோடு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் நம்பிக்கை இழப்பும் ஏற்பட்டுவிடும் என்றார்.
இதற்கு நீதிபதி டி.எஸ்.தாக்கூர், “கடன் நிலுவைத் தொகை பெரிய அளவில் உள்ளது...சரி, கடனை திருப்பிப் பெற என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள் என்று கேட்கிறோம், மேலும் செயலற்ற சொத்துக்கள் அல்லது வாராக்கடன் நிலவரம் என்ன?” என்றார்.
இதற்கு பதில் அளித்த ஆர்பிஐ வழக்கறிஞர், எந்த ஒரு தகவல் வெளியீடும் ஆர்பிஐ சட்டம், கடன் தகவல் நிறுவனச் சட்டம் மற்றும் நிதிநிறுவன விவகாரங்களுக்கான நம்பகத்தன்மை, ரகசியகாப்புக்கான 1983-ம் ஆண்டு சட்டம் ஆகியவற்றை மீறுவதாகும், என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷன் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களுக்குச் சாதகமாக ரகசியக்காப்பை குறிப்பிட வேண்டிய தேவை இல்லை என்றார். மேலும், உச்ச நீதிமன்றம் 2015-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் ரகசியக் காப்புக்குப் பதில் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததையும் சுட்டிக் காட்டினார் பிரசாந்த் பூஷன்.