தமிழகத்தைப்போன்று தெலங் கானா மாநிலத்திலும் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ெரிவித்தார்.
தெலங்கானா மாநில சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயமாக நிறைவேற்றப்படும். வாக்குறுதிப்படி எந்தவித நிபந்தனைகளும் இன்றி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். தங்க நகை மீது விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனும் ரத்து செய்யப்படும். இதன் மூலம் தெலங்கானாவில் உள்ள சுமார் 26 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
இனி வரும் 5 ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஒரு லட்சம் கோடியும், தாழ்த்தப் பட்டோர் நலனுக்காக ரூ.50,000 கோடியும் செலவழிக்கப்படும். தெலங்கானா மாநிலத்தில் பின் தங்கிய வர்க்கத்தினர் 85 சதவீதம் உள்ளனர்.
இவர்களுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவாக 69 சதவீதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. ஆத லால், தமிழகத்தைப் போன்று தெலங்கானாவிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். தேவைப்பட் டால், மத்திய அரசை ஒப்புவித்து மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
தெலங்கானா மாநில மக்களின் கனவு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியால்தான் நிறைவேறியது. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் தெலங்கானா அமைய மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் போன்றோரின் ஒத்துழைப்பும் மறக்க முடியாதது. இவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவ்வாறு முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.