பனாஜி: கோவா சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 14-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கோவா சட்டப்பேரவையில் மொத்த முள்ள 40 இடங்களில், 36 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்டு கூறியதாவது:
தற்போது 36 வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை விரைவில் அறிவிப்போம். நேற்று 36 வேட்பாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. கோவாவின் சமீபத்திய வரலாற்றைக் கருத்தில் கொண்டு, ஒற்றுமையாக இருப்போம் என்றும், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களாக தேர்ந் தெடுக் கப்பட்டால், அவர்கள் 5 ஆண்டு காலம் முழுவதுமாக கட்சி உறுப்பினர்களாக இருப்போம் என்றும், ஒருங்கிணைந்த ஆட் சியை நடத்துவோம் என்றும் வேட்பாளர்கள் எங்களிடம் உறுதி யளித்துள்ளனர்.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கோவா மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸை ஆட்சிக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு செல்லும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேசியப் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு சிதம்பரம் கூறும்போது, “அகில இந்திய திரிணமூல் காங்கிரஸின் பொது செயலாளருக்கு நான் சமமான வன் அல்ல. எனவே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எம்.பி.யுடன் என்னால் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட முடியாது. காங்கிரஸின் பலம், கட்சித் தொண்டர்கள் எண்ணிக்கை, கோவா மக்களுக்கு சேவை செய்த வரலாறு ஆகியவற்றைதான் என்னால் சொல்ல முடியும். கோவா மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தால், காங்கிரஸ் ஆட்சி அமையும்’’ என்றார்.