புதுடெல்லி: ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது. பல மெட்ரோ நகரங்களிலும் இதுவரை டெல்டா வைரஸ் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாகிவிட்டது என இந்திய சார்ஸ் வைரஸ் மரபணு கூட்டமைப்பு( INSACOG ஐஎன்எஸ்ஏசிஓஜி) தெரிவித்துள்ளது.
ஐஎன்எஸ்ஏசிஓஜி ( INSACOG ) என்பது கரோனா வைரஸ் குறித்தும், அதன் உருமாற்றம் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடங்களின் கூட்டமைப்பாகும்.
இந்த கூட்டமைப்பு கடந்த 10 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின் தகவல் வெளியாகியுள்ளது. அதில், "ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது. அது பல மெட்ரோ நகரங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாகிவிட்டது. மேலும், ஓமைக்ரானின் BA.2 பிஏ 2 வகை வைரஸ் இந்தியாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஒமைக்ரான் நோயாளிகளுக்கு மிதமான தொற்றே ஏற்படுகிறது. இருப்பினும் மருத்துவமனைகளில் அனுமதியாவோர் எண்ணிக்கையும், ஐசியுவில் அனுமதியாவோர் எண்ணிக்கையும் தற்போதைய அலையிலும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறியுள்ள நிலையில் எஸ் ஜீன் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது ஃபால்ஸ் நெகட்டிவ் பரிசோதனை முடிவையே தரும்.
உலகளவில் அண்மையில் கண்டறியப்பட்ட B.1.640.2 உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் குறித்தும் கண்காணித்து வருகிறோம். இது கவலை தரும் வகையறா வைரஸ் அல்ல. இதுவரை இந்தியாவில் இந்த வகை கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 3,33,533.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,92,37,264
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,59,168.
இதுவரை குணமடைந்தோர்: 3,45,70,131
சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 21,87,205
தினசரி பாசிடிவிட்டி விகிதம் 17.78% என்றளவில் உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 525.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,89,409.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,61,47,69,885 (161 கோடி)
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது