கோவின் வலைதளத்தில் இருந்து யாருடைய தகவல்களும் கசிய வில்லை என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் வசதிக்காக கோவின் வலைதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் தங்களுக்கு அருகே உள்ள பகுதிகளில் எங்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது; எந்த தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட விவரங்களை பெறவும், பதிவு செய்யவும் முடியும். இந்த வலைதளம் உருவாக்கப்பட்ட பிறகு லட்சக்கணக்கான மக்கள் இதில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
இதனிடையே, இந்த கோவின்வலைதளத்தில் பதிவு செய்தோரின் தகவல்கள் கசிந்து வருவதாக நேற்று முன்தினம் வதந்திகள் பரவி வந்தன.
விசாரணை நடத்த உத்தரவு
இதற்கு விளக்கமளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச் சகம் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், “கோவின் வலைதளத்தில் இருந்து யாருடைய தகவல்களும் கசியவில்லை. அனைத்து தகவல்களும் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. தகவல் கசிவு விவகாரத்தில் முகாந்திரம் எதுவும் இல்லாத போதும் மத்திய சுகாதாரத் துறை இதுதொடர்பாக விசாரணை நடத்தவுள்ளது.
கோவின் வலைதளத்தில் யாரும் தங்களின் முகவரியையோ அல்லது கரோனா பரிசோதனை முடிவுகளையோ பதிவு செய்ய வேண்டியதில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ