8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்த வைணவ மகான் ஸ்ரீ இராமானுஜரின் 1000 ஆண்டுகள் நிறைவுற்றதன் நினைவாக, அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள திரிகண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் மடத்தில் 34 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயர ஐம்பொன்னாலான ‘சமத்துவ சிலை’ நிறுவப்பட்டுள்ளது. இதனை வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆளவந்தாரை தொடர்ந்து வைணவ பீடத்துக்கு தலைமை தாங்கி, அதனை சீரமைத்து ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை வைணவத்தை தழைத்தோங்க செய்த மகான் தான் இராமானுஜர். தனக்கு போதித்த 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீதேறி அனைவருக்கும் போதித்தவர் இராமானுஜர். வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலைநாட்டிய இராமானுஜர், தான் வாழும் காலத்தில் மனித இனத்தில் இருந்த தீண்டாமையை ஒழிக்க பிள்ளையார் சுழி போட்ட வைணவ நாயகன். இராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டுமின்றி, அவர் ஒரு தலைசிறந்த நிர்வாகியுமாவார். ஒரே சமயத்தில் ஸ்ரீ ரங்கம் கோயிலையும், வைணவத்தையும் நிர்வகித்ததே இதற்கு சான்றாக விளங்குகிறது. தற்கால ஆகம சாஸ்திரத்தை கொண்டு வந்து அனைத்து வைணவ கோயில்களிலும் ஒரே மாதிரியான சடங்குகள், சம்பிரதாயங்கள் என ஒழுங்குமுறைப்படுத்திய மகான் இராமானுஜர். ஸ்ரீ ரங்கம் கோயிலின் உடமைகளை மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் இவரை ரங்கநாதரே ‘உடையவர்’ என அழைத்ததாக ஐதீகம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இராமானுஜர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல வைணவ மடங்களை நிறுவினார். ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தலைமை மடத்துக்கு விதி முறைகளை உருவாக்கினார். தாழ்த்தப்பட்ட இன மக்களை கோயில்களில் அனுமதிக்க வேண்டுமென அறிவித்ததோடு, அவர்களோடு இணைந்து பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களை அவர் ‘திருக்குலத்தார்’ என அழைக்கலானார். வட மொழியில் இராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யம் ஒரு சிறந்த புத்தகமாக இன்றும் விளங்குகிறது. இதுபோன்று உலகறிந்த மகானான இராமானுஜருக்கு ஹைதராபாத்தில் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் மடத்தில் 34 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயரத்தில் பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமானுஜருக்கு 120 கிலோ எடையில் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தாமரை மலர் பீடம் மீது இராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது இராமானுஜரின் கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலுக்குள் இராமானுஜருக்கு 200 கிலோ எடையில் தங்க சிலை கற்ப கிரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே, யானைகள் தாங்கிப்பிடிக்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்ம பீடம் (தாமரை) 2 அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. 2 அடுக்குகளிலும் 18 சங்குகளும், 18 சக்கரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பத்ம பீடத்தின் மீது இராமானுஜருக்கு 108 உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திரிதண்டியின் உயரம் மட்டும் 135 அடியாகும். பத்ரவேதியுடன் இராமானுஜருக்கு மொத்தம் 216 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் 2வது மிகப்பெரிய சிலையாகும். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அடுத்தப்படியாக இராமானுஜரின் சிலை உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது. மேலும் இந்த சிலைக்கு முன் செயற்கை நீர் வீழ்ச்சி தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதில் யானைகள், அதற்கு மேல் அன்னப்பறவை சிலைகள் அமைக்கப்பட்டு, தாமரை மலர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தாமரை மலரில் இருந்து இராமானுஜரின் சிலை வருவது போல் அமைக்கப்பட்டு, அதற்கு அபிஷேகம் நடப்பது போலவும் உருவாக்கி உள்ளனர். மேலும், இந்த வளாகத்தில் ஆன்மீக நூலகமும், உணவகமும், தியான வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு திறந்து வைக்க உள்ளார். இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.