‘‘மனைவி இந்திராணியுடன் பேசியதாலேயே, பீட்டர் முகர்ஜி கொலைக்காரரா?’’ என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம் செய்தார்.
மும்பையில் இளம்பெண் ஷீனா போரா கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து 2015-ம் ஆண்டு அவரது உடல் உடல் பாகங்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கில் ஷீனாவின் தாய் இந்திராணி, அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய், 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்கில் ஸ்டார் இந்தியா முன்னாள் தலைமை நிர்வாகி பீட்டர் முகர்ஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஷீனா கொலை வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பீட்டர் முகர்ஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபாத் பாண்டா வாதாடியதாவது:
கடந்த 2012-ம் ஆண்டு ஷீனா போரா கொலை செய்யப்பட்ட கால கட்டத்தில் இந்திராணி பலருடன் பேசியுள்ளார். பீட்டர் முகர்ஜி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாலேயே அவர் கொலைக்காரரா? அப்படியானால், இந்திராணி தனது செயலாளர் காஜலுடன்கூட பல முறை பேசியுள்ளார்.
மேலும், ஷீனா கொலை செய்யப்பட்ட பிறகு மூத்த ஐபிஎஸ் அதிகாரி தேவன் பாரதியுடன் 8 முறை தொலைபேசியில் உள்ளார். அதை சிபிஐ.யிடம் தேவன் கூறவில்லை. இதுகுறித்து சிபிஐ.யும் விசாரிக்கவில்லை. தவிர இவர்களை எல்லாம் குற்றம் சொல்லாதபோது, பீட்டர் முகர்ஜியை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்?
கொலையுடன் தொடர்புப்படுத்தி பண பரிமாற்றம் நடந்துள்ளது என்று சிபிஐ கூறுவது நம்பும்படி இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் அபாத் பாண்டா வாதாடினார். இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.