மேற்கு வங்க மாநிலம், பட்கே பட்கே என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
ஏழை மக்களின் பணத்தை சாரதா சிட் பண்ட் நிறுவனம் மோசடி செய்துவிட்டது. இவர்கள் மீது மம்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மாறாக மோசடியில் ஈடுபட்டவர்களை மம்தா பாதுகாக்கிறார். இதுபோல் நாரதா ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய கட்சியினருக்கு எதிராகவும் மம்தா நடவடிக்கை எடுக்கவில்லை.
ஊழலுக்கு எதிராக போரிடு வோம், கருப்புப் பணத்தை மீட்போம் என்று மோடியும் கூறினார். ஆனால் அவர் பிரதமர் ஆன பிறகு கருப்புப் பணத்துக்கு எதிராக பெயரளவில் மட்டுமே நடவடிக்கை எடுத்தார். திருடர்கள் அல்லது தீவிரவாதிகள் கூட சிறிதளவு வரி செலுத்திவிட்டு தங்கள் கருப்புப் பணத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றிவிடக் கூடிய திட்டத்தைதான் அவர் அறிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போர் குறித்து பிரதமர் பேசி வருகிறார். பிறகு எப்படி லலித் மோடியும் விஜய் மல்லையாவும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடிந்தது? குஜராத் தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந் துள்ளது.
மோடியும் மம்தாவும் பொய் வாக்குறுதிகள் அளிக்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன் 70 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்று மம்தா கூறி னார். காங்கிரஸ் இதை நம்பி, அவருக்கு ஆதரவு அளித்தது. ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. சணல் தொழிலாளர்களோ இருந்த வேலைவாய்ப்பை இழந்தனர்.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.