புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் வெற்று விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக கூறி, ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஜூஹி சாவ்லா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் ஜூஹி சாவ்லா உள்ளிட்ட 3 பேர் அபராதத் தொகையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட கோரி டெல்லி மாநில சட்டச் சேவை ஆணையம் (டிஎஸ்எல்எஸ்ஏ) டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.
இந்த மனு நேற்று நீதிபதி அமித் பன்சால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூஹி சாவ்லா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது. எனவே வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்றார். இதையடுத்து வழக்கை பிப்ரவரி 3-ம் தேதிக்கு நீதிபதி அமித் பன்சால் தள்ளிவைத்தார்.