புதுடெல்லி: சோம்நாத்தில் புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், நாடு விடுதலைக்கு பிறகு டெல்லியில் உள்ள சில குடும்பங்களுக்காக மட்டும் கட்டுமானங்கள் நடந்தன என காங்கிரஸ் கட்சியினரை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
சோம்நாத் கோயிலுக்கு இந்தியா மற்றுமின்றி வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு தற்போதுள்ள சுற்றுலா மாளிகை, கோயிலிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் புதிய மாளிகை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து சோம்நாத் கோயிலுக்கு அருகிலேயே ரூ.30 கோடிக்கும் மேற்பட்ட செலவில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது.
சொகுசு அறைகள், முக்கியப் பிரமுகர்களுக்கான அறைகள், டீலக்ஸ் அறைகள், மாநாட்டு கூடம், கலையரங்கம் உள்ளிட்ட உயர்தர வசதிகளுடன் இந்த புதிய மாளிகை கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மாளிகையின் எந்த அறையிலிருந்து பார்த்தாலும் கடற்கரை தெரியும் வகையில் இந்த மாளிகையின் நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோம்நாத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திறப்பு விழாவை தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
சோம்நாத் கோயில் அழிக்கப்பட்ட சூழ்நிலைகள், சர்தார் வல்லபாய் படேல் கோயிலைப் புதுப்பிக்க எடுத்த முயற்சிகள் ஆகிய இரண்டும் நமக்கு ஒரு பெரிய செய்தியை தருகின்றன. நமது நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு மிகப் பெரியது.
கடந்த 7 ஆண்டுகளில், சுற்றுலாவின் திறனை உணர நாடு அயராது உழைத்துள்ளது. சுற்றுலா மையங்களின் வளர்ச்சி என்பது அரசின் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, பொதுமக்களின் பங்கேற்பு பிரச்சாரமாகும்.
நாடு விடுதலைக்கு பிறகு டெல்லியில் உள்ள சில குடும்பங்களுக்காக மட்டும் கட்டுமானங்கள் நடந்தன. இந்த குறுகிய சிந்தனையில் இருந்து தேசத்தை நாம் வெளியே கொண்டு வந்துள்ளதுடன், புதிய தேசிய முக்கியத்துவம் சின்னங்களை அமைத்துள்ளதுடன், ஏற்கெனவே உள்ள சின்னங்களுக்கும் புகழை சேர்த்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.