லக்னோ: காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட ‘நான் ஒரு சிறுமி, என்னால் போராட முடியும்’ என்ற கோஷத்தை முன்னெடுத்து உ.பி. முழுவதும் பரப்பிய காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா மவுரியா பாஜகவில் இன்று இணைந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
உ.பி. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பாஜக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் அந்தந்தக் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்து. “நான் சிறுமி, என்னாலும் போராட முடியும்” என்ற கோஷத்தை காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா மவுரியா மாநிலம் முழுவதும் முன்னெடுத்தார். இதனால் மாநிலம் முழுவதும் பிரியங்கா மவுரியா அறியப்பட்டார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட பிரியங்கா மவுரியாவுக்கு காங்கிரஸ் சார்பில் இடம் வழங்கப்படவில்லை. வேட்பாளர்கள் தேர்வில் சில தில்லுமுல்லு வேலைகளை பிரியங்கா மவுரியா செய்தது தெரியவந்தால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியுடன் இருந்த பிரியங்கா நேற்று லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்துள்ளார்.
அப்போது பிரியங்காவிடம், அங்கிருந்தவர்கள் பாஜகவில் சேரப்போகிறீர்களா எனக் கேட்டதற்கு “ஆமாம். நான் சேரப்போகிறேன், களத்தில் அதிகமாகப் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், சீட் வழங்கியது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டுவிட்டது. எனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை
ஆனால், நான் தகுதியான பெண். என்னால் போராட முடியும் என்று காங்கிரஸ் கோஷமிட்டது. ஆனால், எனக்குப் போராட வாய்ப்பு வழங்கவில்லை. தேர்தலில் சீட் பெற என்னிடம் பணம் கேட்டனர். என்னைப் பெண்களுக்கு எதிரானவர், ஓபிசி பிரிவினருக்கு எதிரானவர் எனக் கூறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு இன்று காலை வந்த பிரியங்கா மவுரியா பாஜகவில் முறைப்படி சேர்ந்தார்.
கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் கட்சி முதல் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 50 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு துணைத் தலைவராக பிரியங்கா மவுரியா இருந்து வந்தார். பிரியங்கா காந்தி முன்னெடுத்த ‘நான் சிறுமி, என்னால் போராட முடியும்’ என்ற கோஷம் மாநிலம் முழுவதும் உள்ள பெண் வாக்காளர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.