திருவனந்தபுரம்: கேரளாவில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாநில அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 80 பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் அலுவலகத்தில் முதல்வரின் அரசியல் செயலாளர் உட்பட 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சர் சிவன்குட்டி கரோனா தொற்றால் 2-வது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கரோனா பாதிப்பால் ஒரே நாளில் மருத்துவமனைகளில் ஐசியூக்களில் படுக்கைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 15%, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20% ஆகவும் அதிகரித்துள்ளது.
‘‘கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும்போது சிறிய மாறுபாடு கூட தீவிரமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏற்கெனவே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. மருத்துவமனைகளில் சேருவோர் எண்ணிக்கையும் ஐசியூ படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவையும் ஒரே நாளில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது’’ என்று திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவ நிபுணர் டிஎஸ் அனிஷ் தெரிவித்துள்ளார்.