புதுடெல்லி: 15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி 15 முதல் 18வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த வயது கொண்டவர்களில் இதுவரை 50% பேருக்கு முதலாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துப் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
“இளைய மற்றும் இளமைத்தன்மையுள்ள இந்தியா வழிகாட்டுகிறது. இது ஊக்கமளிக்கும் செய்தியாகும். இந்த வேகத்தை தொடர்ந்து நாம் பராமரிப்போம்.
தடுப்பூசி செலுத்துவதும், கோவிட்-19 தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடிப்பதும் முக்கியமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவோம்” எனக் கூறியுள்ளார்.