இந்தியா

5 மாநில தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: வேளாண் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் திட்டவட்டம்

ஏஎன்ஐ

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தர்காண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த மாநிலத் தேர்தலிலும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு கொடுக்கப்போவதில்லை என பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயூ) ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் சிந்தன் ஷிவிர் என்ற மூன்று நாள் விவசாயிகள் கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அவரிடம், தேர்தலில் பாரதிய கிஸான் யூனியனின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் "நாங்கள் இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாரதிய கிஸான் யூனியனின் தலைவர் நரேஷ் டிகைத், விவசாயிகள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டினார். அதன் பின்னர் அவர் பாஜகவின் சஞ்சீவ் பல்யாணை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் அவர், பழைய வேண்டுகோளை திரும்பப் பெறுகிறேன். தேர்தலில் பிகேயு யாரையுமே ஆதரவிக்கவில்லை என்றார்.

இந்நிலையில் ராகேஷ் டிகைத்தும் 5 மாநிலத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை என்று கூறியுள்ளார்.

சிந்தன் ஷிவிர் கூட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் கைதான பல்வேறு விவசாயிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஆனால், உள்துறை இணை அமைச்சர் இன்னும் வெளியில் இருக்கிறார். இது மிகப்பெரிய பிரச்சினை. இது தவிர குறைந்தபட்ச ஆதார விலை பற்றி அரசு இன்னும் ஏதும் தெரிவிக்கவில்லை. 13 மாத கால போராட்டத்தை அடுத்தே அரசு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. எங்களுக்குக் கிடைத்த வெற்றியே அரசியல் கட்சிகளின் கவனத்தை எங்களின் பக்கம் திருப்பியுள்ளது என்றார்.

யார் இந்த டிகைத்?

உத்தரப் பிரதேச மேற்குப்பகுதியில் உள்ள முசாபர்நகரின் சிசவுலி கிராமத்தில் ஜூன் 4, 1969 இல் பிறந்தவர் ராகேஷ். இவரது தந்தையும் நாட்டின் விவசாய சங்கங்களின் தலைவராக இருந்து புகழ் பெற்றவரான மஹேந்தர்சிங் டிகைத்.

பாரதிய கிஸான் யூனியன் எனும் விவசாய சங்கத்தை 1987 இல் அமைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் மஹேந்திரசிங். இவர் தன் சங்கம் சார்பில் விவசாயிகளின் மின்சாரப் பிரச்சனைக்காக முசாபர்நகரில் மிகப்பெரியப் போராட்டம் நடத்தி இருந்தார்.

அதில் நடைபெற்றக் கலவரத்தில் விவசாயி ஜெய்பால் மற்றும் உ.பி. மாநிலக் காவல்துறை காவலர் அக்பர் ஆகியோர் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகினர். அப்போது, டெல்லி காவல்துறையில் ஒரு சாதாரணக் காவலராக இணைந்து பணியாற்றி வந்தார் ராகேஷ்.

எனினும், சிறுவயது முதலாக தனது தந்தையின் போராட்டக் குணங்களால் ஈர்க்கப்பட்டு வந்தார் ராகேஷ். கடந்த 1993 இல் மஹேந்திரசிங் விவசாயிகளை திரட்டி டெல்லி செங்கோட்டையை நோக்கி ஒரு பெரிய பேரணி நடத்தினார்.

அப்போது, இனி தமக்கு இக்காவலர் பணி தேவையில்லை எனக் கூறி விவசாயிகளுக்காக ராஜினாமா செய்தார். தொடர்ந்து தனது மூத்த சகோதரர் நரேஷ் டிகைத்துடன் இணைந்து ராகேஷும் பாரதிய கிஸான் யூனியனை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT