முலாயம் சிங் யாதவுடன் இளைய மருமகள் அபர்ணா யாதவ், 
இந்தியா

யோகி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முலாயம் சிங்கின் இளைய மருமகள்?

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச அரசியலில் நாளுக்கு ஒரு திருப்பமாய் அரசியல் நிகழ்வுகள் அமைகின்றன. சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் சிங்கின் மனைவி அபர்ணா யாதவ் இன்று யோகி ஆதித்யநாத் முன்னிலையில் பாஜகவில் இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் பாஜகவுக்கு கடைசி நிமிட அதிர்ச்சியாக உ.பி. அமைச்சர்கள் மூவர், எம்எல்ஏக்கள் எனப் பலரும் கட்சியிலிருந்து விலகினர். அத்துடன் நில்லாமல் அனைவரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

இந்நிலையில், பழிக்குப்பழி அரசியல் சம்பவமாக, முலாயமின் இளைய மருமகள் அபர்ணா யாதவை தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக.
அவர் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஹரியாணா பாஜக பொறுப்பாளர் அருண் யாதவ் தனது ட்விட்டரில், "முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக்கின் மனைவி அபர்ணா யாதவ் இன்று காலை 10 மணியளவில் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் பாஜகவில் இணைவார்" என்று தெரிவித்துள்ளார்.

உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளார் அகிலேஷ் யாதவ். அவருக்கு தேசியக் கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியன ஆதரவு தெரிவித்து வருகின்றன. அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் வரிசைக்கட்டி சமாஜ்வாதிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சானி, தாரா சிங் சவுகான் ஆகிய மூன்று அமைச்சர்களையும் வினய் சக்யா, ரோஷன் லால் வர்மா, முகேஷ் வர்மா, பகவதி சாகர் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தன் பக்கம் இழுத்தார் அகிலேஷ்.

இப்போது, அபர்ணா யாதவ் பாஜகவில் இணையவிருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இது குறித்து அபர்ணா யாதவ் தரப்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் அவ்வாறு இணையும் பட்சத்தில் அது அகிலேஷுக்கு சவால் விடுக்காவிட்டாலும் அரசியல் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ், மக்களவை எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT