சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சட்ட விரோத மணல் குவாரி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 12-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் நெருங்கிய உறவினரான பூபிந்தர் சிங் ஹனி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இவரது வீடு மொஹாலியில் உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் முதல்வரின் நெருங்கிய உறவினர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளது அரசி யல் வட்டாரத்தில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் தனது கட்சி பதவியைத் துறந்து காங்கிரஸிலிருந்து வெளி யேறிய பிறகு மாநிலத்தில் சட்ட விரோத மணல் குவாரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்களுக்கும் பங்கு உள்ளதாகஅவர் குறிப்பிட்டிருந்தார்.
மாநிலத்தின் பிற எதிர்க்கட்சிகளான சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சட்ட விரோத மணல் குவாரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் களுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன.
2018-ம் ஆண்டு பஞ்சாப் போலீஸ் பதிவு செய்த முதல்தகவல் அறிக்கையின் அடிப்படையில் அன்னியச் செலாவணி மோசடி வழக்காக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறது.