உத்தராகண்ட் குடியரசுத் தலைவர் ஆட்சி சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
உத்தராகண்டில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. ஆனால், உத்தராகண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பகுதி இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 16-ம் தேதி நிறைவு பெற்றது. இன்று தொடங்கியுள்ள இதன் 2-ம் பகுதி மே 13 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஏற்கெனவெ எதிர்பார்க்கப்பட்டதுபோல், உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர். இதனால் மாநிலங்களவை முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை மதியம் 2 மணி வரை, 3 மணி வரை என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. 3 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் அமளி சற்றும் குறையாததால் அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் நம்பிக்கை:
முன்னதாக, நாடாளுமன்றம் வருகை தந்த பிரதமர் மோடி, "நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் ஆக்கபூர்வமாக நடைபெற்றது. நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் உதவின. பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.
அதேபோல், இந்த முறையும் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினர் உதவுவர் என நான் நம்புகிறேன். ஜனநாயக முறைப்படி நடந்து கொண்ட நல்ல முடிவுகளை எம்.பி.க்கள் எடுப்பார்கள்" என்றார்.