மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி கொள்ளை நடந்தது. கடந்த 10-ம் தேதி ஷாஹத் நகரில் வாட்ச்மேன் தீபக் போயிர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் கடந்த 14-ம் தேதி கல்யாண் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 22 வயது இளம்பெண் பிரியா தாராவ்தே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொலைகள், கொள்ளை குறித்து தானே போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது கடந்த திங்கட்கிழமை 3 பேரை கைது செய்தனர். அவர்களில் 16 வயது சிறுவனும் ஒருவன். இதுகுறித்து தானே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கல்யாண் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி கொள்ளைகள் நடந்து வந்தன. கடந்த 10-ம் தேதி ரசாயன தொழிற்சாலையில் வாட்ச்மேன் கொலை செய்யப்பட்டார். அவரிடம் செல்போன் திருடு போயிருந்தது. அதன்பின் 14-ம் தேதி கல்யாண் பகுதியில் சாய்தாம் ஹவுசிங் சொசைட்டி குடியிருப்பில் பிரியா என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
இவர் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். 3-வது மாடியில் உள்ள அவரது வீட்டு ஜன்னல் வழியாக 16 வயது சிறுவனும் மேலும் சிலரும் உள்ளே நுழைந்து நகை, பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
சத்தம் கேட்டு விழித்த பிரியா அலறியுள்ளார். அப்போது பிரியாவின் தலையில் வாளால் வெட்டியுள்ளான் சிறுவன். அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அதன்பின், பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பிரியா வீட்டிலும் செல்போன் திருடி உள்ளனர். அதன்பின், போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். மேலும் 2 கொலைகளில் திருடப்பட்ட செல்போன்களை கண்காணித்தோம். அப்போது பயன்பாட்டில் இருந்த ஒரு செல்போன் மூலம் சிறுவனை பிடித்தோம்.
நடந்த கொலைகள் குறித்து விசாரணை அதிகாரிகளிடம் 16 வயது சிறுவன் பயமின்றி கூறினான். வாட்ச்மேனை கொலை செய்தது, இளம்பெண் பிரியாவை பெரிய வாளால் தலையில் வெட்டியதையும், அவர் இறந்த பின் பாலியல் பலாத்காரம் செய்ததையும் அந்த சிறுவன் ஒப்புக் கொண்டான்.
இவ்வாறு போலீஸ் உயரதிகாரி கூறினார். இதுகுறித்து தானே போலீஸ் ஆணையர் பரம்பீர் சிங் கூறுகையில், ‘‘குற்றங்களின் தன்மை மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால், அந்த சிறுவனை வயது வந்தவர்கள் நிலையில் வைத்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளோம். அதற்காக சிறார் நீதி மற்றும் குழந்தைகள் நல வாரியத்தை அணுக உள்ளோம். அவர்களுடைய அனுமதி கிடைத்தவுடன், புதிய சட்டத்தின் கீழ் வயது வந்தவராக கருதி அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்’’ என்றார்.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவியை ஓடும் பஸ்ஸில் ஒரு கும்பல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது. அந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது சிறுவனும் இருந்தான். ஆனால், சிறார் சட்டத்தின் கீழ் அவனுக்கு 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் அவன் விடுவிக்கப்பட்டான்.
இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தன. அதன்பின், கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 வயது சிறுவர்களையும் வயது வந்தவர்களாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, சிறார் நீதி சட்டத் திருத்தம் கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது.
அந்தச் சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டால், நாட்டிலேயே இதுதான் முதல் வழக்காக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.