புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் 12 வயது சிறுமி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், 12 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் தொடார்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.
இந்த மனு வரும் மார்ச் 22 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இது குறித்து டியா குப்தா (12) என்ற அச்சிறுமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "நாட்டில் தற்போது 15 முதல் 17 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 12 வயதுக்கும் கீழ் உள்ள எங்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் பள்ளிக்குச் சென்று இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. வீட்டிலேயே இருப்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது. ஆனால், அரசாங்கம் எங்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி எதுவும் சொல்லவில்லை. வெளிநாடுகளில் எங்கள் வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதனால் நான் அரசாங்கத்துக்கு இந்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ளேன்" என்றார்.
தடுப்பூசி செலுத்திவிட்டால் துணிச்சலுடன் பள்ளிக்குச் செல்வீர்களா என்ற கேள்விக்கு, "நிச்சயமாகச் செல்வேன். தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் கரோனாவின் தீவிர பாதிப்பில் இருந்து காக்கப்படுகின்றனர் என்பது குறித்து உலகம் முழுவதும் நிறைய அறிவியல்பூர்வமாக ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் ஒமைக்ரான் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலவில்லை" என்றார்.
டியா குப்தாவின் மனுவில், ஏர்பரல் முதல் மே 2021 காலக்கட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.