புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு 2022 பொதுத் தேர்தல் பற்றி 2022 ஜனவரி 8 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தேர்தலுக்கான அறிவிக்கை 2022 ஜனவரி 21 அன்று வெளியிடப்பட்டு வாக்குப்பதிவு 2022 பிப்ரவரி 14 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
2022 பிப்ரவரி 16 அன்று ஸ்ரீ குரு ரவீந்திர தாஸ் பிறந்த நாள் விழாக்களில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு செல்வார்கள் என்பது தொடர்பாக மாநில அரசு, அரசியல் கட்சிகள், இதர அமைப்புகள் ஆகியவவை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்து பல முறையீடுகளை அனுப்பி உள்ளன.
மேலும், இந்த விழா நடைபெறும் நாளுக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஏராளமான பக்தர்கள் வாரணாசிக்கு செல்லத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், வாக்குப்பதிவு நடைபெறும் 2022 பிப்ரவரி 14 பெருமளவு வாக்காளர்கள் வாக்களிக்காமல் விடுபடுவார்கள் என்பதையும் அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர் . இதுதொடர்பாக பஞ்சாப் மாநில அரசு, தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோரின் தகவல்களையும் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
இந்த முறையீடுகள் கிடைத்துள்ள தகவல்கள், புதிய சூழ்நிலைகள், கடந்தகால முன்னுதாரணங்கள் ஆகியவற்றை பரிசீலித்த பின், பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் கால அட்டவணையைக் கீழ்காணுமாறு திருத்தியமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அறிவிக்கை வெளியிடும் தேதி 25 ஜனவரி, 2022 (செவ்வாய்)
மனுதாக்கலுக்கு கடைசி நாள் 01 பிப்ரவரி, 2022 (செவ்வாய்)
மனுக்கள் பரிசீலனை தேதி 02 பிப்ரவரி, 2022 (புதன்)
திரும்பப் பெற கடைசி நாள் 04 பிப்ரவரி, 2022 (வெள்ளி)
வாக்குப்பதிவு நாள் 20 பிப்ரவரி, 2022 (ஞாயிறு)
வாக்கு எண்ணிக்கை 10 மார்ச், 2022 (வியாழன்)
இவ்வாறு தெரிவித்துள்ளது.