இந்தியா

மார்ச் மாதத்திலிருந்து 12 முதல் 14 வயதுடைய சிறாருக்கும் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மார்ச் மாதத்திலிருந்து 12 முதல் 14 வயதுடைய சிறாருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர், மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

ஓராண்டில் தடுப்பூசி பயணம்: கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி நாட்டில் முதன்முதலாக கரோனா தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. கோவாக்சின் , கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன. 2021, அக்டோபர் 21 ஆம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை எட்டப்பட்டது. 2022, ஜனவரி 7 ஆம் தேதி 150 கோடி டோஸ் செலுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 156.76 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 43.19 லட்சம் முன்னெச்சரிக்கை டோஸ்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி, 15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவில் 3.38 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 13 நாட்களில் இந்த வயது பிரிவில் உள்ளவர்களில் 45% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த வயதுப் பிரிவில் மொத்த 7.4 கோடி பேர் உள்ளனர்.

என்.கே.அரோரா

12 முதல் 14 வயதுடைய சிறாருக்கும்.. இந்நிலையில், மார்ச் மாதத்திலிருந்து 12 முதல் 14 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவில் உள்ள 7.4 கோடி பேரும் ஜனவரி இறுதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அவர்கள் அனைவருக்கும் பிபரவரி இறுதிக்குள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவிடும். ஆகையால், வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் 12 முதல் 14 வயதுடையோருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்க விரும்புகிறோம்.

12 முதல் 17 வயதுடையவர்களும் வயதுவந்தோரைப் போன்றவர்களைத் தான் என திமுக நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால், முதற்கட்டமாக 15 முதல் 17 வயதுடையோருக்கும், அடுத்தக்கட்டமாக 12 முதல் 14 வயதுடையோருக்கும் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி இறுதியில் 12 முதல் 14 வயதுடையோருக்கான தடுப்பூசித் திட்டம் தொடங்கலாம்.

இந்த வயதில் இருப்போருக்கு தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம். ஒமைக்ரான் வேகமாகப் பரவும் சூழலில் இந்த வயதினர் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் எனப் பல இடங்களுக்கும் சென்று வருவதால் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம். அதனாலேயே அரசாங்கம் 12 முதல் 17 வயதுடையோருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தது" என்றார்.
அதேபோல், 5 முதல் 14 வயதுடைய இணை நோய் கொண்ட சிறாருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகளநல மருத்துவ அகாடமியின் தலைவர் மருத்துவர் பிரமோத் ஜோக் தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 2 முதல்17 வயது கொண்ட சிறாருக்கு செலுத்தப்பட்டு சோதனை வெற்றியடைந்தது. இதன் அடிப்படையில் இந்த வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT